தணிந்ததா தாகம்!? - ரா ப ஈ
அகன்ற அணுவாய் அகிலம் கிடக்க
அனைத்து உயிரும் அதனுள் திளைக்க
ஆற்றல் பெருகி ஆசை கொழுத்த
அதிமேதாவி மனிதனும் முளைத்தான்
பணியும் உயிர்களை பணியில் விதித்து
பணியா உயிர்களின் பற்றிடம் பறித்து
பரந்த கானகம் பாதியை அழித்து
பற்றி எரியும் மீதியை மறந்து
மொண்டு முழுங்கி மொத்தம் முடிந்து
அதில்மீறும் மிச்சம் அழகென காத்து
வளங்கள் வழித்து வயிற்றை நிறைத்து
தின்று தீர்த்து திகட்டி கழிந்து
கழிவை கழுவிக் கடலில் கரைத்து
கரையில் கனிமம் கடை வரை கடைந்து
கனலும் பெருகி கதிர்கள் துளைத்து
காற்றைத் தேடி அலைந்து களைத்து
உழைப்பில் வெந்து உடல்உகும் நீரின்
உவர்ப்பில் உதிரம் உறையாமல் காத்து
உதிரும் உயிரை உடலொடு பற்றி
உருண்டு கிடந்தவன் திறந்த வாயின்
வறண்ட உதடின் வரிகள் மீது
வருட வந்தது வான் சிந்தும் கண்ணீர்
வதங்கி கிடந்தேன் வன்மங்களோடு
எதற்கு இரக்கம் என்று அவன் கேட்க..
மருண்டு மடிவது நீ மட்டும் அல்ல
மரங்கள் உண்டு மண்மீது இன்னும்
மனமும் இழைந்து மறுபடி வந்தேன்
பிழைத்துப் போ என பிழிந்தது முகிலும்.
- ரா ப ஈ
Comments
Post a Comment